தமிழ்நாடு ஆளுநர் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் `தமிழ்நாடு அரசியல் சட்டத்திற்கு புறம்பாகவும் மத்திய அரசிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கிறோம்’ எனக்கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு வந்த முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் மற்றும் மாநில செயலாளர் பாஸ்கர் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், ஜானகிராமன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட காவல் துறையினர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஜானகிராமன் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் முறையான அழைப்பு மற்றும் மரியாதைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஒரு தலைபட்சமாக மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜானகி ராமன் மீது ராணிப்பேட்டை காவல் நிலையத்தில புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM