சவுதி அரேபியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் அமிதாப் பச்சன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
அண்மையில் நடந்து முடிந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதேவேளையில், மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல்-நாசர் அணி ஆண்டுக்கு, 214 மில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் இந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் நேரடியாக மோதிக் கொள்ளும் நட்புறவு போட்டி சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் நேற்று நடைபெற்றது.
அல் நாசர் அணிக்கு ஒப்பந்தம் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் லெவன் அணிக்காகவும் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்காக மெஸ்ஸியும் களமிறங்கினார். போட்டி தொடங்குவதற்கு இந்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் அமிதாப் பச்சன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
இந்த போட்டிக்கான விஐபி டிக்கெட்டை ஏலத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏலம் 1 மில்லியன் சவூதி ரியால்களில் இருந்து (டாலர் மதிப்பில் 266,000) தொடங்கியது. விஐபி டிக்கெட்டை ஏலத்தில் பெறுபவர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை சந்திக்கவும், வெற்றி பெறும் அணியுடன் போட்டோஷூட்டில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கிறது. ஏலம் ஒரு மில்லியன் ரியாலில் தொடங்கி, 10 மில்லியனைத் தாண்டியது. 2.66 மில்லியன் டாலர் (10 மில்லியன் ரியல்ஸ்) கொடுத்து கோடீஸ்வர தொழிலதிபரான முஷ்ரப் அல் கம்தி வாங்கினார்.