கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதில் மதரீதியில் பாகுபாடு காண்பிக்கப்பட்டதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இவர் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது உடைமைகள் மற்றும் பயணிகள் சிலரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விமானத்தில் ஏறும் முன் அங்கிருந்த பெண் அதிகாரி தனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த இருவரின் பைகளை சோதனை செய்தார் என கூறியுள்ளார். சோதனை செய்த இடத்தில் எந்த ஸ்கேனர் கருவியும் இல்லை.
ஒரு நபரை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்துவது மன வேதனை தருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட சிலரை மட்டும் சோதனை செய்யக்கூடாது, அப்படி செய்தால் அனைவரின் உடைமைகளையும் சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சனம் ஷெட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து சோதனை செய்யப்படவில்லை என்றும், அனைவரும் சோதனைக்கு உட்படுத்தபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in