12 நாட்களாக தண்ணீர் இன்றி தெங்கம்புதூர் கடைவரம்பு நெற்பயிர்கள் கருகும் அவலம்

நாகர்கோவில்: தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதிக்கு 12 நாட்களாக தண்ணீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது கும்பபூ சாகுபடி நடந்துள்ளது. தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கும்பபூ நெற்பயிர்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால், நெற்பயிர்கள் வாடும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் சீராக செல்லாமல் பயிர்கள் கருகினால், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பளத்தை பிடித்தம் செய்யப்படும்.
 
மேலும் சஸ்பெண்ட் நடவடிக்கையும் எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் கும்பபூ சாகுபடி நடந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் கிடைக்காததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை உருவானது. இதனை தொடர்ந்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதின் பேரில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சில நாட்கள் வந்த நிலையில் மீண்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து விவசாயி பெரியநாடார் கூறியதாவது:

தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதிகளில் வருடம்தோறும் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது கடந்த 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் தெங்கம்புதூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனை அதிகாரிகள் கவனத்தில் கொண்ட சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அனந்தனார் சானலில் தற்போது தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் தெங்கம்புதூர் கடைவரம்பு சானலில் சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.