Happy Pongal 2023: கடலூரில் தென்பெண்ணை ஆற்று திருவிழா! பொங்கல் தீர்த்தவாரி

Happy Pongal 2023 Last Day Celbrations: தமிழர் திருநாள் தை மாதம் தொடங்கி நடைபெற்று வந்த பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவுக்கு வந்தன. பொங்கல் பண்டிகையின் கடைசி நிகழ்வான ஆற்று திருவிழா, தென் பெண்ணையாற்றில் நடைபெற்றது. நாகரீகம் வளர்த்த ஆறுகளுக்கு நன்றி சொல்லும் திருநாளான இந்த ஆற்று திருவிழா. கடலூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தென்பெண்ணை ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆற்றுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 

தைத்திருநாள், இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாளாகும். சூரியனுக்கு நன்றி சொல்லி போகி நாளன்று வழியனுப்பி வைப்பதுடன் தொடங்கும் பொங்கல் கொண்டாட்டங்கள், பொங்கல் பண்டிகையின் கடைசி நிகழ்வான ஆற்று திருவிழாவுடன் நிறைவடைந்தது.

போகிப் பண்டிகை, சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், ஜல்லிக்கட்டு என தொடர்ந்த பொங்கல் கொண்டாட்டங்கள், தென் பெண்ணை ஆற்றில் நேற்று நிறைவுற்றது. ஆறுகள் இருந்த இடங்களிலேயே நாகரீகம் தோன்றியது என்பது உலக வரலாறு. அப்படி நாகரீகத்தை வளர்ந்த ஆறுகளுக்கு நன்றி சொல்லும் திருநாளே இந்த ஆற்று திருவிழா.

கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் ஆற்றுத் திருவிழா நடைபெறவில்லை. கொரோனாவின் தாக்கம் மிகவும் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஆற்று திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு கடலூர், திருவந்திபுரம், திருப்பாதிரிப்புலியூர், மற்றும் மஞ்சக்குப்பம், ரெட்டி சாவடி மற்றும் புதுச்சேரி- கடலூர் எல்லையில் உள்ள கோவில்களில் இருந்து சுவாமி சிலைகள் கொண்டு வரப்பட்டன.

கன்னியகோயில், கிருமாம்பாக்கம், மனப்பட்டு, பாகூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கோவில் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக ஆற்றங்கரையில் வைக்கப்பட்டது. தெய்வச் சிலைகளை வணங்கிய மக்கள், அங்கு நடைபெற்றா தீர்த்தவாரி நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தனர்.

ஆற்று திருவிழாவையொட்டி மஞ்சக்குப்பம் ஆல் பேட்டை தென்பெண்னை ஆற்று திடலில் ஏராளமான கடைகள் மற்றும் ராட்டினங்கள் போடப்பட்டுள்ளன. ஏராளமான பொதுமக்கள் தீர்த்தவாரி மற்றும் உற்சவ சிலைகளை தரிசனம் செய்து சென்ற்னர்.

பாதுகாப்பிற்காக சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவுடன், இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைவுக்கு வந்தாலும், நாளை தை அமாவாசை நாள் என்பதால், நாளையும் ஆற்றாங்கரைகளில் மக்கள் வந்து பித்ருக்களுக்கு செய்யும் சடங்குகளைச் செய்வார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.