ஆற்றில் சங்கமிக்கும் தெய்வங்கள்; 2 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டம்; களைகட்டிய ஆற்றுத் திருவிழா!

தை பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, 5-வது நாளான நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வட தமிழகத்தில் தென்பெண்ணை ஆற்றோரம் உள்ள பகுதிகளில் மிகப் பிரபலமான இந்த ஆற்றுத் திருவிழா, கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், 19-ம் தேதி மீண்டும் மிகுந்த உற்சாகத்தோடு திருவிழா கொண்டாடப்பட்டது. 

ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்

ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், உறவுகளை ஒன்றுபடுத்தும் வகையிலுமாக இந்தத் திருவிழா அமைந்திருந்தது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை, பேரங்கியூர், எல்லீஸ் சத்திரம், ஏனாதிமங்கலம், பிடாகம் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றோர பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆற்றுத் திருவிழாவில், பல பகுதிகளிலிருந்தும் 50-க்கும் மேற்பட்ட கோயில்களின் உற்சவர் சிலைகள் கொண்டுவரப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. பல தெய்வங்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இந்த ஆற்றுத் திருவிழாவை காண்பதற்காகக் காலை முதலே லட்சக்கணக்கான மக்கள் தென்பெண்ணை ஆற்றில் நிரம்பி வழிந்தனர். 

எனவே, விழுப்புரம் மாவட்டக் காவல்துறை சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தென்பெண்ணை ஆற்றினைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கோயில்களிலிருந்து, தை மாதம் 5-ம் நாள் காலையில் சிறப்பு அலங்காரத்தோடு மேளதாளங்கள் முழங்க தெய்வங்கள் ஆற்றுக்குப் புறப்படும். பின், ஆற்றினை அடைந்த தெய்வங்களைப் பாவித்து அங்குத் தீர்த்தவாரி நடைபெறும். சிலர், தீர்த்தவாரி உற்சவர் சிலைகளை ஆற்றுக்கே நேரடியாக கொண்டுவந்து ஆற்றில் நீராடச்செய்து, அவர்களுக்கான ஓர் இடத்தில் வைத்து உற்சவர்களுக்குச் சிறப்பு அலங்காரம் செய்வார்கள்.

ஆற்றுத் திருவிழா

சிவபெருமான், அம்மன், முருகன், விநாயகர் என தீர்த்தவாரிக்காக அன்று தென்பெண்ணை ஆற்றில் சங்கமிக்கும் பல தெய்வங்களை அங்குக் குடும்பங்களோடும், நண்பர்களோடும் திரளும் மக்கள் வழிபடுவார்கள். தீர்த்தவாரி முடிந்து, கலசத்தில் புனித நீரோடு சொந்த ஊரை நோக்கிச் செல்லும் தெய்வங்கள், அன்று இரவு முதல் பொழுது விடிய விடிய ஊரில் உலா வந்து மக்களுக்கு அருள்வார்கள்.

மார்கழி மாதத்தைத் தொடர்ந்து வரும் தை மாதத்தில், தங்களது ஊரின் தெய்வங்கள் தீர்த்தவாரி மேற்கொள்வதால், தங்களுடைய ஊருக்கு எவ்வித தீயதும் நேராது என்பதும், நல்லதே நடக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், திருவண்ணாமலையில் கோயில் கொண்டுள்ள அண்ணாமலையார், மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) பகுதியில் சந்திரசேகர் அலங்காரத்தில் தீர்த்தவாரி மேற்கொண்டு, அன்று இரவு ரிஷப வாகனத்தில் அப்பகுதி மக்களுக்கு அருட்காட்சி புரிந்தார்.

சந்திரசேகர் அலங்காரத்தில் அண்ணாமலையார்

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காகப் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், தெய்வங்களை வழிபட்டு, ஆற்றில் நீராடி, உறவினர்களோடு பேசி மகிழ்ந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.