டேராடூன்: ஜோஷிமாத்தில் விரிசல் ஏற்பட்ட இடங்களில், இதுவரை 863 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு, நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உத்தரகண்டின் சமோலி மாவட்டம், ஜோஷிமாத் நகரில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடந்த சில வாரங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சாலையில் பூமி வெடிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த நகரம் மண்ணுக்குள் புதையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டது.
ஜோஷிமாத் நகரம் நிலச்சரிவு அபாய மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள மலாரி இன் மற்றும் மவுன்ட் வியூ ஆகிய இரு ஹோட்டல்கள் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழக்கூடிய அபாயத்தில் உள்ளதால், இவற்றை இடித்து தரைமட்டமாக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல, விரிசல்கள் விழுந்த நுாற்றுக்கணக்கான வீடுகளையும் இடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட கட்டடங்களில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் நிலவரம் பற்றி மேற்பார்வை செய்யும் பணியில், சமோலி மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்சு குரானா சென்றுள்ளார். மாநில பேரிடர் பொறுப்பு படை மற்றும் போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.
இது பற்றி மாநில பேரிடர் மேலாண் துறை செயலாளர் ரஞ்சித் குமார் கூறுகையில், இதுவரை 863 கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 218 குடும்பத்தினருக்கு ரூ.3.27 கோடி நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement