மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தாமதம் செய்வதாக மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் வரும் 24-ம் தேதி மதுரையில் போராட்டம் நடத்தும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகர் திமுக செயலாளர் கோ.தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. இதைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே வரும் 24-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடத்த உள்ளது.
இதில், மதுரை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். திமுக
கூட்டணி கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பர் எனத் தெரிவித்துள்ளார்.