கீவ்: மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத நிலையால் மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறும்போது, ” நீங்கள் ஆயுதங்கள் வழங்கி உக்ரைனுக்கு உதவலாம். ரஷ்யாவை தோல்வி அடைய செய்வதை தவிர்த்து இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேறு வழியில்லை. மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத தன்மையால் உக்ரைனியர்கள் நாளும் கொல்லப்படுகிறார்கள். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் உயிர்கள் பறிபோகின்றன. விரைவாக யோசியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று சுமார் 50 நாடுகள் உக்ரைனுக்கு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ ஆயுதங்களை வழங்க ஒப்புக் கொண்டன. கனரக வாகனங்கள், வெடிமருந்துகள் ஆகியவை ரஷ்யாவுக்கு எதிராக போராட உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜெர்மனி மட்டும் பீரங்கிகளை வழங்குவதற்கு சற்று தயங்கி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் மேற்குலக் நாடுகளுக்கு எதிராக இந்தக் கருத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் : அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.