மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்

மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் (iNCOVACC) என பெயரிடப்பட்டுள்ளது.

image
‘இன்கோவாக்’ மருந்து தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின நாளில் இம்மருந்து அறிமுகமாகிறது என அறிவித்திருக்கிறார். இந்த மருந்து மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இதுவரை கொரோனா தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.