குவஹாத்தி: ஷாருக்கான் யார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கேட்ட நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஷாருக்கான் பேசியுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ஷாருக்கானின் பதான் படம் வரும் 25 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பேஷாராம் பாடலில் காவி பிகினி உடை அணிந்து தீபிகா படுகோனே ஆடி இருப்பதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குவஹாட்டியில் இந்த படம் திரையிட உள்ள திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த பதான் படத்தின் போஸ்டரை இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் செய்தியாளர்கள் நேற்று (சனிக்கிழமை) கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ”ஷாருக்கான் யார்? அவரைப் பற்றியோ பதான் படத்தைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் பிரச்சினை தொடர்பாக ஷாருக்கானிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு ஏதும் வரவில்லை. வந்தால் இந்த விவகாரம் என்ன என்பதை பார்க்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று அதிகாலை 2 மணிக்கு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். குவஹாட்டியில் நடந்த சம்பவம் குறித்த தனது கவலையை அவர் தெரிவித்தார். எவ்வித பிரச்சினையும் இன்றி படம் வெளியாக வேண்டும் என அவர் வேண்டினார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்பதை சுட்டிக்காட்டி நான் அவருக்கு உறுதி அளித்துள்ளேன். விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.