பிகார் மாநிலத்தில் 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 39 இடங்களில் வென்றது. இதில் பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16, லோக் ஜன்சக்தி 6 அடங்கும். இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் முறித்து கொண்டது. இதையடுத்து மகாகத் பந்தன் என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணி உருவானது.
மகாகத் பந்தன் கூட்டணி
இதில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 7 கட்சிகள் அடங்கும். இவர்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார் நிதிஷ் குமார். கூட்டணி முறிவால் ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்கு கிடைக்கும் பூமிகார் சமூக வாக்குகளை பாஜக தவறவிடும் சூழல் உருவாகி இருக்கிறது.
மக்களவை தேர்தல்
அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் தனது செல்வாக்கை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. அந்த வகையில் பிகார் மாநிலத்தில் பூமிகார் சமூக வாக்குகளை குறிவைத்து பல்வேறு வியூகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வகுத்து வருகிறார். ஏதேனும் ஒரு வகையில் அந்த வாக்குகளை பெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அமித்ஷா பயணம்
யாருடைய தயவும் இன்றி தனித்து களமிறங்கி வாக்கு வங்கி அரசியலில் வெற்றி வாகை சூட விரும்புகிறது. அதன்படி, வரும் பிப்ரவரி 22ஆம் தேதி சுவாமி சகாஜனந்த் சரஸ்வதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவர் தான் பூமிகார் சமூகத்தினர் தலைவராக திகழ்கிறார். எனவே அமித் ஷா நேரில் வந்து பிறந்த நாள் விழாவில் பங்கேற்றால் அந்த சமூக மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என கணக்கு போட்டு வைத்துள்ளது.
ஓபிசி வாக்குகள்
மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் ஆதரவு இருந்து வருகிறது. இந்த வாக்கு வங்கியை குறிவைத்தும் பாஜக வியூகம் வகுத்து வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். பிகாரில் உருவான மகாகத் பந்தன் கூட்டணி வலுவற்று இருப்பதாக பாஜக கருதுகிறது.
மோதல் போக்கு
இது 2015ல் அமைக்கப்பட்டதை போல இல்லை. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையில் போதிய ஒத்துழைப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக முதல்வர் நிதிஷ் குமாரின் இமேஜ் பெரிதும் சரிந்துள்ளது. கடந்த முறை மகாகத் பந்தன் கூட்டணிக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பக்க பலமாக இருந்தார்.
இம்முறை அதுவும் கிடையாது. இதனால் தங்களுக்கான வழி திறந்திருப்பதாக பாஜக கருதுகிறது. இந்நிலையில் தான் கட்சியை பலப்படுத்த அமித் ஷா காய்களை நகர்த்தி கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர், அக்டோபர் என தொடர்ந்து இருமுறை பிகார் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அடுத்து வரும் பிப்ரவரியில் மீண்டும் ஒரு பயணத்திற்கு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.