புதுடில்லி: அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை இன்று (ஜன.,23) பிரதமர் மோடி சூட்டினார்.
சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில், ஜனவரி 23ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பராக்ரம் திவாஸ் தினத்தையொட்டி, அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா அந்தமான் வந்தார். அவருக்கு அந்தமான் மக்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார்.
அதன்படி, மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு சூட்டப்பட்டன.
பிரதமர் மோடி பேசியதாவது:
அந்தமான் நிகோபரில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. இன்று புதிய பெயர்கள் பெற்றுள்ள 21 தீவுகளில் பல சிறப்புகள் அடங்கியுள்ளன. வீர் சாவர்க்கரும், நாட்டுக்காகப் போராடிய பல மா வீரர்கள் அந்தமானை சேர்தவர்கள். 4-5 ஆண்டுகளுக்கு முன்பு நான் அந்தமானில் உள்ள ‛ போர்ட் பிளேயர்’ என்ற இடத்திற்கு சென்ற போது, அங்குள்ள 3 முக்கிய தீவுகளுக்கு இந்தியப் பெயர்களை சூட்டினேன்.
அந்தமானின் திறமை மிகப் பெரியது. முதன் முதலாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பூமி இந்த அந்தமான் ஆகும். சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது. வீர சாவர்க்கர் உள்ளிட்ட பல தியாகிகள் அந்தமான் தீவு சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தனர். இன்று நேதாஜி சுபாஷ் போஸின் பிறந்தநாள். இந்த நாளை பராக்கிரம் திவாஸ் என்று நாடு கொண்டாடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், பிரதமர் மோடியின் இந்த முயற்சி, அந்தமான்-நிகோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளில் இன்று(ஜன.,23) நமது பரம்வீர் சக்ரா வெற்றியாளர்களின் பெயர்கள் சூடப்பட்டுள்ளது.
இது இந்த பூமி இருக்கும் வரை அவர்களின் நினைவை நிலைநிறுத்தும் முயற்சி ஆகும். ராணுவத்தின் உற்சாகத்தை அதிகரிக்கும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கும், இந்திய சுதந்திர இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்திய வரலாற்றில் அவர் ஆற்றிய உழைப்பு ஈடு இணையற்ற பங்களிப்பை நினைவு கூர்கிறேன். இந்தியாவுக்கான அவரது பார்வையை நனவாக்க நாங்கள் உழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்