புதுடெல்லி: பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய குடியரசு தின விழாவாக இந்த ஆண்டு குடியரசு தின விழா இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது எவ்வாறு நடைபெற இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
சாதாரண மக்களுக்கு முதல் வரிசை: இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பம்சமாக பொதுமக்கள் பங்கேற்புடன் குடியரசு தின விழா என்பது கருப்பொருளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, குடியரசு தின விழாவின் முதல் வரிசை நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டிய தொழிலாளர்கள், ரிக்ஷா வண்டி இழுப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காய்கறி விற்பவர்கள், பால் விற்பவர்கள் உள்ளிட்ட சாதாரண குடிமகன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட இருக்கிறார்கள். விவிஐபிகளுக்கு ஒதுக்கப்படும் முதல் வரிசையில் இவர்கள் அமர இருக்கிறார்கள்.
சிறப்பு அழைப்பாளராக எகிப்து அதிபர்: இதற்குமுன் ராஜபாதை என அழைக்கப்பட்ட பாதை, கடந்த ஆண்டு கடமை பாதை என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து முதல்முறையாக கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு அழைப்பாளராக எகிப்து அதிபர் அல் சிசி அழைக்கப்பட்டுள்ளார். குடியரசு தின விழாவில் எகிப்து ராணுவத்தின் 180 வீரர்கள் பங்கேற்கும் அணிவகுப்பும் நடைபெற இருக்கிறது.
முழு அளவிலான ராணுவ ஒத்திகை: குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு ஊர்வலத்திற்கான ஒத்திகை டெல்லியில் இன்று முழு அளவில் நடைபெற்றது. இதில், பீரங்கிகள், ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வாகனங்கள், எதிரிகளின் ஏவுகணைகளை அழித்து நிர்மூலமாக்கும் தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனங்கள் உள்பட ஏராளமான ராணுவ வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்று அணிவகுத்துச் சென்றன. ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் கம்பீரமாக நடைபெற்றது. இந்த அணிவிப்பை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.
கடந்த சில நாட்களாக ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் டெல்லியில் கடமை பாதையில் தனித்தனியாக ஒத்திகைகளை மேற்கொண்டன. விமானப்படை, கடற்படை, துணை ராணுவப்படை, பெண்கள் படை ஆகியவற்றின் அணிவகுப்புகள் நடைபெற்றன. விமானப்படை ஒத்திகையின்போது, விமானப்படை வீரர்கள் விமான சாகசங்களில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு விமானங்கள் ஒரே திசையில் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகச் செல்வது, வானில் இருந்தவாறு மூவண்ண மலர்களைத் தூவுவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஒத்திகையின்போது செய்து காண்பிக்கப்பட்டன. இந்த ஆண்டு 50 விமானப்படை விமானங்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க இருக்கின்றன. இந்த ஆண்டு முதல்முறையாக இந்திய விமானப் படையின் கருடா கமாண்டோ படை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க இருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் 144 மாலுமிகள் கொண்ட கடற்படைக் குழுவை லெப்டினன்ட் கமாண்டர் திஷா அம்ரித் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மங்களூரைச் சேர்ந்த இவர், இந்திய கடற்படையின் டோர்னியர் 228 கடல் ரோந்து விமானத்தின் உயர் அதிகாரியாக இருக்கிறார்.