புதுடெல்லி: “உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக அவமதிக்கும் மத்திய சட்ட அமைச்சர், குஜராத் கலவரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த பிபிசியின் கருத்தை நம்பியதற்காக மற்றவர்களை கேள்வி கேட்கிறார்” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜகவின் பாசாங்குத்தனம்: ‘நீதிமன்றம் அரசியல் சாசனத்தை ஹைஜாக் செய்துவிட்டது’ என்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் பேச்சை வைத்து மத்திய சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக அவமதிப்பது அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், பிபிசி நிகழ்ச்சியை குடிமக்கள் பார்ப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். பிபிசி ஆவணப்படத்தின் கோணம் ஒரு நற்செய்தியின் (gospel) உண்மை. ஆனால், மத்திய அரசின் அதீதமான தணிக்கை நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்றம் அதன் நீதிபதிகளை அவைகளே நியமித்துக் கொள்வதன் மூலம் அரசியல் சாசனத்தை ஹைஜாக் செய்துவிட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேட்டியினை பகிர்ந்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘இது ஒரு நீதிபதியின் குரல், பெரும்பாலான மக்கள் இதே பார்வையைத்தான் கொண்டுள்ளனர்’ என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த ட்விட்டர் பதிவில், “உண்மையில் பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான விவேகமான கருத்தையே கொண்டுள்ளனர். அரசியலமைப்பின் விதிகளையும் மக்களின் ஆணைகளையும் புறக்கணிப்பவர்கள் மட்டுமே தங்களை அரசியல் அமைப்புக்கு மேலானவர்களாக கருதிக்கொள்கின்றனர். இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அழகு அதன் வெற்றிதான். மக்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலமாக தங்களை ஆட்சி செய்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் விருப்பங்களுக்கேற்ப சட்டங்களை உருவாக்குகின்றனர். நமது நீதித்துறை சுதந்திரமானது. நமது அரசியலமைப்பு உயர்வானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறையில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றுவரும் நிலையில் சட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்பட சர்ச்சை குறித்து கடுமையாக விமர்சித்திருந்த கிரண் ரிஜிஜு, “காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவான மனோபாவம் இந்தியாவில் உள்ள சிலருக்கு இன்னமும் இருக்கிறது. அவர்கள், உச்ச நீதிமன்றத்தைவிட பிபிசி-யை உயர்வானதாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், அவர்கள் அந்நிய சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள். இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது” என்று அவர் விமர்சித்திருந்தார்.