‘தங்கம்’ என்ற மலையாள சினிமா புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் மாணவர் சங்கத் திறப்புவிழா ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த 18-ம் தேதி எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் நடந்தன. இதில் நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகர் வினீத் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்.
மேடையிலிருந்த நடிகை அபர்ணா பாலமுரளியை வரவேற்கும் விதமாகப் பூங்கொத்து கொடுத்த எல்.எல்.பி இரண்டாம் ஆண்டு மாணவர் விஷ்ணு என்பவர், அபர்ணாவின் அனுமதியின்றி கைகளைப் பிடித்து, தோளில் கை போட்டு செல்ஃபி எடுக்க முயன்றார். இந்த விவகாரம் விவாதமானதைத் தொடர்ந்து மாணவர் சங்கம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது. மேலும், கல்லூரி நிர்வாகம் மாணவர் விஷ்ணு-வை 7 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் கொச்சியில் நடைபெற்ற ‘தங்கம்’ சினிமா புரமொஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அபர்ணா பாலமுரளி கூறுகையில், “எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் திடீரென அந்த மாணவன் தோளில் கைபோட்டபோது நான் கம்பர்ட்டபிளாக இல்லை. அவர் எனக்கு முன் பின் தெரியாத ஆளாக இருந்தார். எனவே நான் விலகி விலகிச்சென்றேன். வருத்தம் தெரிவிக்க மீண்டும் மேடைக்கு வந்த அந்த மாணவன் என்னிடம் கைகுலுக்க முயன்றபோது நான் அனுமதிக்கவில்லை. எனக்கு அந்தச் சமயத்தில் பயம் தோன்றியது. அது எனக்கு ஒரு மோசமான அனுபவமாக இருந்தது.
ஒரு சட்டக்கல்லூரி மாணவர் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக்கூடாது என எனக்குத் தோன்றியது. நடந்ததற்கு அங்கிருந்த எல்லா மாணவர்களும் மன்னிப்பு கேட்டார்கள். அதனால்தான் நான் அங்கிருந்து வரும்போது புகார் எதுவும் கூறவில்லை. கல்லூரி அதிகாரிகள் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அது எனக்கு அந்த கல்லூரி மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்துள்ளது. கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றார்.
கோழிக்கோட்டிலும் நடிகைகளுக்கு எதிராக இதுபோன்ற மோசமான சம்பவம் ஏற்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சமூகம் நன்றாக வேண்டுமானால் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து சரியாக வேண்டும்” என்றார்.