வாஷிங்டன்: அமெரிக்க பேராசிரியர் ஒருவர் ChatGPT-க்கு வைத்த எம்பிஏ தேர்வில் அந்த சாட்பாட் தேர்ச்சி பெற்றுள்ளது. இருந்தாலும் கணக்கு பாடத்தில் கொஞ்சம் மோசம் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆய்விதழ் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ளார்.
இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலானவர்களின் பார்வையை பெற்றுள்ளது சாட் ஜிபிடி (ChatGPT). கதையை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். இருந்தாலும் இதில் கிடைக்கும் சில தகவல்கள் பொதுவாக இருப்பதாகவும், சில தகவல்களில் தெளிவு இல்லை என்றும், சிலவற்றில் பிழை இருப்பதாகவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா பல்கலைக்கழக வார் டன் பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர் ஒருவர் ChatGPT-யை நூதனமாக சோதித்து பார்த்துள்ளார். எம்பிஏ தொடர்பான பாடம் குறித்து ChatGPT இடம் சில கேள்விகளை கேட்டு அவர் சோதித்து பார்த்துள்ளார். அதற்கான பதில்களை சரியாக கொடுத்துள்ளது இந்த சாட்பாட். இதனை கிறிஸ்டியன் என்ற பேராசிரியர் சோதித்து பார்த்துள்ளார்.
இந்தத் தேர்வில் ChatGPT-க்கு பி அல்லது பி மைனஸ் கிரேட் வழங்கலாம் எனவும் அவர் சொல்லியுள்ளார். அதோடு கற்பித்தல், பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் தேர்வு சார்ந்து என கொள்கை அளவில் மாற்றம் மேற்கொள்ள வேண்டியது குறித்தும் அவர் சொல்லியுள்ளார். இந்தத் தேர்வில் ChatGPT சிறப்பாக பதில் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் கணக்குப் பாடத்தில் கொஞ்சம் மோசம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதென்ன ChatGPT? – ChatGPT தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட். இதனை ஓபன் ஏஐ எனும் ஆய்வக நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.