கமல்ஹாசன் ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான களம் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்த தொகுதியில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.  முன்னதாக, காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்கள் வீட்டில் இருந்து இளைய மகனை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்குமாறு பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறியிருந்த நிலையில், நேற்று அவரே போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியானது. 

இந்த இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு கூட்டணி கட்சி தலைவர்களை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘கமல்ஹாசனை சந்தித்து ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான எனக்கு ஆதரவு தர வேண்டும், திமுக கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என எங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். 

கமல் ரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்துள்ளது. அவரது தந்தை காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர். காமராஜருக்கு நெருக்கமானவர். எனவே காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுள்ளோம். நிர்வாகிகளோடு பேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு நல்ல முடிவை இன்று அவர் அறிவிப்பார். அதேபோல ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். கண்டிப்பாக அதை செய்வார் என நம்புகிறேன். 

கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன். என் மனதளவில் அவர் உத்தரவு தந்து விட்டார் என தான் நம்புகிறேன். பாஜக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை பதவி இழக்க செய்து, அதிகாரத்தை வைத்து மிரட்டி ஆள் சேர்க்கிறார்கள். நாங்கள் கொள்கை ரீதியான ஆட்களை சந்தித்து வருகிறோம். கமல்ஹாசன் மத சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர். சாதி வித்தியாசம் அவருக்கு கிடையாது. திமுக கூட்டணிக்கு அவர் அதரவு தருவார் என நம்புகிறோம்.

அதிமுக 2 ஆக உடையவில்லை, 4 ஆக உடைந்துள்ளது. கண்டிப்பாக அதிமுகவை பொறுத்தவரை 4 பேரும் சேர்ந்து பாஜகவை ஆதரிக்கும் வகையில் பாஜக அதிகாரத்தை பயன்படுத்தும். கடந்த தேர்தலில் கமல்ஹாசன் கட்சி சுமார் 11,000 வாக்குகள் பெற்றுள்ளனர். இது சாதாரண விஷயம் இல்லை. மக்கள் மத்தியில் கமல் செல்வாக்கு பெற்றுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக முறைப்படி சந்திப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பாஜக முறையை பின்பற்ற மாட்டோம். 

பிரிந்துள்ள 4 அதிமுக கட்சிகளும் பாஜகவுக்கு ஜாலரா அடிக்கும் கட்சிகளாக உள்ளன. அந்த தொகுதியில் பாஜகவை நிற்க வைத்து 4 கட்சிகளும் பாஜகவிற்கு ஆதரவு தருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை நான் வரவேற்கிறேன்.’ என கூறினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.