தமிழ்நாடு அரசு கள் விற்கலாம்: பேரரசு ஆலோசனை

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் நெடுமி. இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். பிரதீப் செல்வாஜ், அபிநயா, ராஜசிம்மன் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது : பனை மரத்திற்குத் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு. பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம் நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று அனைத்தும் பயன்படும். இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால், தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.