2020-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து மாடுகளை சட்டவிரோதமாக கடத்தியதாக ஒருநபர் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கு, தொடர்பான விசாரணைக்கு பிறகு அவருக்கு ஆயுள் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நவம்பர் 2022 -ல் நீதிமன்றம் தனது உத்தரவை வழங்கியது. குஜராத் தபி மாவட்ட நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது பேசிய அவர், “பசு என்பது விலங்கு மட்டுமல்ல, அது ஒரு தாய். பசுக்களை கொலை செய்வதை நிறுத்தினால் பூமியின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட வீடுகள் அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுவதில்லை.பல நோய்களுக்கும் பசுவின் சிறுநீர் அருமருந்தாக இருக்கிறது.
பசுக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் நமது செல்வமும், சொத்துக்களும் இல்லாமல் போய்விடும். பசு வதைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை லைவ் லா என்ற இணையதளம் வெளியிட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் பேசுபொருளாகியிருக்கிறது.
மாட்டுச் சாணத்தால் கட்டப்பட்ட வீடுகள் அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுவதில்லை, மாட்டு சிறுநீர் பல தீராத நோய்களுக்கு மருந்தாகும் என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.