“திமுகவுக்கு உள்ள எதிர்மறை ஓட்டுகள் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. அதுவே எங்களுக்கு வெற்றியின் அடித்தளமாக அமையும்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் கூட்டணியில் முதன்மை கட்சியாக உள்ள அதிமுகவிடம் கலந்து பேசி இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்தோம்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் ஒரு வெற்றி முடிவை எடுத்துள்ளோம். அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
சின்னம் கிடைக்கும் என்ற அரசியல் நம்பிக்கையிலேயே அனைத்து அரசியல் கட்சிக்கும் பயணம் தொடர்கிறது. அரசியலில் என்றைக்குமே நான் நல்லதை மட்டுமே நினைப்பவன். ஏற்கெனவே உள்ள எங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். நல்லது நடக்கும் அது உறுதியாக நடக்கும் என்று நம்புவோம். இரண்டு நாள் பொறுத்திருந்தால் நல்ல செய்தி வரும். இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
திமுக மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. அதனால் 100 சதவீதம் தமிழ்நாட்டின் முதன்மை கட்சியாக அதிமுக உள்ளது. அதன் தலைமையிலே இடைத்தேர்தலிலே வெற்றி பெறுவதற்காக வியூகத்தை ஏற்படுத்தியுள்ளோம். அந்த வியூகம் வெற்றி வியூகமாக அமையும். இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழல் தமாகாவின் முடிவு எங்களுடைய வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளம் என்று நாங்கள் நம்புகிறோம். பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு அவரது கட்சிக்கு உயர்வை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடும், கண்டிப்போடும் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். என்னை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். சின்னமும் எங்களுக்கு இருக்கும். சின்னத்தின் அடிப்படையிலேயே வெற்றி பெறுவார் என்பதுதான் எங்களது கருத்து. ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களது கூட்டணியை எதிர்த்து நின்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
பாஜக எங்களோடு இருப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். அதிமுக தமாகா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று முழுமையாக நம்புகிறேன். நாங்கள் நிறுத்தக்கூடிய வேட்பாளரும் பலமான வேட்பாளராக மண்ணின் மைந்தராக இருப்பார். மேலும் திமுகவுக்கு உள்ள எதிர்மறை ஓட்டு மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. அதுவே எங்களுக்கு வெற்றியின் அடித்தளமாக அமையும்” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM