பிரபல கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ், தனது சொத்துகள், பணம் தொடர்பான கணக்குகளைப் பார்த்துக் கொள்வதற்காக நாக்பூரைச் சேர்ந்த சைலேஷ் தத்தா என்பவரை தனது மேலாளராக நியமித்திருந்தார். இவர் உமேஷ் யாதவின் நண்பராவார்.உமேஷ் யாதவ் கிரிக்கெட்டில் அதிக நேரம் செலவிட்டதால், அவரது பண விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பில், சைலேஷ் தத்தா இருந்தார்.
அவரை உமேஷ் யாதவ் முழுமையாக நம்பியுள்ளார். எனவே, உமேஷ் யாதவின் நிதி விவகாரங்கள், அவரை விட சைலேஷ் தத்தாவிற்கே அத்துப்படி என்று கூறப்படுகிறது. எனவே, உமேஷ் யாதவை ஏமாற்றத் திட்டமிட்ட தத்தா, திட்டமிட்டப்படி நாக்பூரில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 44 லட்சம் ரூபாயை உமேஷ் யாதவிடம் இருந்து வங்கிக் கணக்கு மூலம் பெற்றிருக்கிறார்.
ஆனால் நாக்பூரில் தனது பெயரில் இடத்தைப் பதிவு செய்து வாங்கிக் கொண்டார். இது குறித்து தெரிய வந்ததும் சைலேஷ் தத்தாவிடம் உமேஷ் யாதவ் கேட்டதற்கு, அவரது பெயருக்கு வீட்டை மாற்றி ஒப்படைக்கவும் இல்லை, கொடுத்த 44 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் முன் வரவில்லை. இதனால் உமேஷ் யாதவ் தான் ஏமாற்றப்பட்டது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சைலேஷ் தத்தாவைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சைலேஷ் தத்தா, உமேஷ் யாதவ் ஆகிய இருவருமே நாக்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.