கேரள லாட்டரியில் 25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசாக வென்ற அனூப் என்ற நபரை யாரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.
திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூபுக்கு கேரள அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி நடந்த திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. தனது மகன் சேமித்து வைத்த உண்டியலை உடைத்து அந்த பணத்தில் 500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கியதாகவும். வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்ததாகவும், லாட்டரி பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டதாகவும் அனூப் அப்போது தெரிவித்திருந்தார்.
25 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள அனூபுக்கு 10 சதவீதம் ஏஜெண்ட் கமிஷன் மற்றும் 30 சதவீதம் வரி போக 15.75 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வந்துள்ளது. அந்தப் பணத்தில் தொழில் செய்யபோவதாக ஏற்கனவே அனூப் கூறியிருந்தார்.
இதற்கிடையே தன்னிடம் கடன் கேட்டு தினமும் வீட்டுக்கு நிறையபேர் வருவதால் நிம்மதி இல்லை என்றும், தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் அனூப் வீடியோ வெளியிட்டிருந்தார். “சொந்த வீட்டுக்கே வரமுடியவில்லை. கோடீஸ்வரனாக இருந்தாலும் சொந்த குழந்தையிடம் வரமுடியாத நிலையிலேயே உள்ளேன். இதை பார்க்கும்போது இவ்வளவு பணம் கிடைத்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன்” என அப்போது வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் அனூப். அதன் பிறகு அனூப் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் அனூப் திருவனந்தபுரம் மணக்காடு ஜங்சனில் கடந்த 20-ம் தேதி லாட்டரி விற்பனை நிலையத்தை தொடங்கினார். தனது மனைவி மாயா-வின் முதல் எழுத்தான ‘எம்’ மற்றும் தனது பெயரின் முதல் எழுத்தான ‘ஏ’ஆகியவற்றை சேர்த்து எம்.ஏ லக்கி செண்டர் என லாட்டரி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளார். 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்த பிறகும் அனூப் பலமுறை லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அதில் அவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை பரிசு கிடைத்துள்ளது. லாட்டரியில் பரிசு வென்ற கைராசிக்காரரின் கையில் இருந்து லாட்டரி வாங்க நிறையபேர் வருவார்கள் என்பதால் லாட்டரி நிலையம் தொடங்கியுள்ளதாக அனூப் தரப்பில் கூறப்படுகிறது. இப்போது வேறு ஏஜெண்டிடம் இருந்து லாட்டரி வாங்கி விற்பனை செய்து வரும் அனூப், விரைவில் தனியாக லாட்டரி ஏஜெண்ட் எடுக்கும் திட்டமும் வைத்திருக்கிறாராம்.
இது குறித்து அனூபின் மனைவி மாயா கூறுகையில், “இப்போது உதவி கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைந்துள்ளது. பம்பர் பரிசு கிடைத்த சமயத்தில் காலையில் கண் விழிக்கும்போதே உதவிகேட்டு வீட்டு முற்றத்தில் ஆட்கள் வந்து நிற்பார்கள். காலையில் வேலைக்கு கூட போக முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனால் நிம்மதி இல்லாமல் போனது. வேறு வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. இப்போது கடன் கேட்டு சிலர் வந்தாலும் எங்களுக்கு பழகிவிட்டதால் அவர்களை கண்டுகொள்வதில்லை.
பணத்தை எப்படி கையாளுவது என வகுப்பு எடுப்பதாக லாட்டரி துறையினர் கூறினர். இதுவரை அழைக்கவில்லை. லாட்டரியில் கிடைத்த பணத்தில் பழைய வீடு ஒன்றை வாங்கி புதுப்பித்து அதில் வசித்து வருகிறோம். வேறு பிசினஸ் குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை. என் கணவரின் ஆட்டோவை எனது சகோதரன் ஓட்டிவருகிறார். லாட்டரியில் பம்பர் பரிசு கிடைத்தவர்களின் பெயரை வெளியில் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. லாட்டரியில் பரிசு கிடைத்தவர்கள் பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்” என்றார்.