பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு, பெங்களூரு விதான் சவுதா கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஏலம் விடுவதற்கு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து, நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக அரசுக்கு பெங்களூரு முதன்மை சிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, தி.மு.க., அரசு 1996ல் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, 1996 டிசம்பர் 11ல், கணக்கில் காட்டப்படாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின் இந்த வழக்கு விசாரணை, பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், இந்தப் பொருட்கள், விதான் சவுதாவின் தரை தளத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இது தொடர்பாக, பெங்களூரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ., ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, பெங்களூரு சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆகியோருக்கு 2022 ஜூனில் கடிதம் அனுப்பினார்.
இதில் குறிப்பிட்டிருந்ததாவது:
ஜெ., வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள்; 750 அலங்கரிக்கப்பட்ட செருப்புகள்; 250 சால்வைகள் சேதம் அடையும் தன்மைஉடையது. இந்த வழக்கில் 2017ல் தீர்ப்பு வந்தது.
தற்போது, ஜெயலலிதா உயிருடன் இல்லை. எனவே அவற்றை தாமதப்படுத்தாமல் ஏலம் விட வேண்டும். இவற்றை அவரது ஆதரவாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர்.
அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். தாமதப்படுத்தினால் கழிவாக மாறிவிடும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘இந்த கடிதம் மீது எவ்விதமான செயல்பாடும் இல்லை’ என்று கூறி, 2022 டிசம்பரில் இரண்டாவது கடிதம் எழுதினார். இதற்கிடையே அவர், பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு 2022 செப்டம்பரில் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பெங்., சிவில் முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இம்மனு, முதன்மை நீதிபதி ராமசந்திர டி.ஹுத்தார் முன்னிலையில், இம்மாதம் 17ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘பல ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை உடனடியாக ஏலம் விட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானதே. எனவே, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கர்நாடக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
– நரசிம்மமூர்த்தி, ஆர்.டி.ஐ., ஆர்வலர், பெங்களூரு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்