புதுடெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, சாலை, தெருக்களில் திரண்டனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் சுதர்பாசிம் பகுதியை மையமாக கொண்டு நேற்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.9 புள்ளிகளாக பதிவானது. சுதர்பாசிம் மாகாணத்தின் பஜுரா, கைலாலி, தான்காதி மாவட்டங்களில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் உணரப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 5.4 புள்ளிகளாக பதிவானது. டெல்லியில் சுமார் 30 விநாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இதன்காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அடுக்குமாடி குடியிருப்புகள், உயரமான கட்டிடங்களில் அதிர்வுகள் நன்கு உணரப்பட்டதால், பீதியடைந்த மக்கள் உடனே வெளியேறி சாலை, தெருக்களில் திரண்டனர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த அமித் பாண்டே என்பவர் கூறும்போது, ‘‘அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது தளத்தில் குடியிருக்கிறேன். என் வீட்டில் நிலநடுக்கத்தை நன்கு உணரமுடிந்தது. வீடுகளில் தொங்கவிடப்பட்டிருந்த அலங்கார பொருட்கள் அதிர்வில் அசைந்தன. சுமார் 30 விநாடிகளுக்கு நிலஅதிர்வு நீடித்தது’’ என்றார். நிலநடுக்கத்தின்போது வீடுகளில் அலங்கார விளக்குகள், மின்விசிறிகள் அசைந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன.
உத்தர பிரதேசத்தின் பரேலி, லக்கிம்பூர் கெரி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி கட்டிடங்களில் இருந்து மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
உத்தராகண்ட் தலைநகர் டேராடூன், சாமோலி, நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது. நேபாளத்தை ஒட்டியுள்ள பிஹாரிலும், டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணாவிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. அங்கு தலைமைச் செயலக ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறி, சாலையில் குவிந்தனர். டெல்லி உட்பட எந்த மாநிலத்திலும் பொருட்சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த நவ.12, 29, ஜன.1, 5-ம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அங்கு நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.