நாடு முழுவதும் தற்போது 24 விரைவு சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. அதோடு 18 விரைவு சாலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. இதில் தலைநகர் டெல்லியையும் நாட்டின் வர்த்தக தலைநகர் மும்பையையும் இணைக்கும் விரைவு சாலை முக்கியமானது. கடந்த 2019 மார்ச் 8-ம் தேதி டெல்லி – மும்பை விரைவு சாலைக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். இதன்படி டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவை இணைக்கும் வகையில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயில் 1,386 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.
பல்வேறு பகுதிகளாக சாலை பணிகள் பிரிக்கப்பட்டு 23 தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அதிதீவிரமாக கட்டுமான பணிகள் நடைபெற்றன. தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விரைவு சாலை போக்குவரத்துக்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த சாலை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது நாட்டின் மிக நீளமான விரைவு சாலையாகும். இப்போது 8 வழிச் சாலையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த விரைவுச் சாலையை 12 வழிசாலையாக விரிவுபடுத்த போதுமான இடவசதி உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலை போடப்பட்டிருப்பதால் அடுத்த 50 ஆண்டுகள் வரை சாலையில் எவ்வித சேதமும் ஏற்படாது என்று கட்டுமான நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
சாலையின் 500 மீட்டர் தொலைவு இடைவெளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல எந்த பகுதியிலும் வேகத் தடைகள் அமைக்கப்படவில்லை. மனிதர்கள், விலங்குகள் சாலையின் குறுக்கே செல்லாத வகையில் விரைவு சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யலாம். வேக கட்டுப்பாட்டை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும். எதிர்பாராதவிதமாக வாகனத்தில் பழுது ஏற்பட்டால் மட்டுமே சாலையோரம் நிறுத்தலாம். தேவையின்றி வாகனத்தை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில், டெல்லி-மும்பை விரைவு சாலையை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.