புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை:
சுகேஷ் சந்திரசேகர் மோசடியான வழிமுறைகளைப் பின்பற்றி பணத்தை குவித்துள்ளார். அதில், பெரும்பாலானவை கணக்கில் காட்டப்படாதவை. சிறு வணிக நிறுவனங்கள் மூலமாக கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கி முறையான வருமானமாக சுகேஷ் தம்பதி மாற்றிக் காட்டியுள்ளனர்.
நெட்பிளிக்ஸில் வெளியான ஓஸார்க் தொடரின் கதைக் கருவும் கருப்பு பணத்தை வெள்ளையாக எப்படி மாற்றுவது என்பதே. அதில் வரும் காட்சிகளை அடிப்படையாக வைத்தே சுகேஷ் தம்பதியும் சட்டவிரோத சம்பாத்தியத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதனை செயல்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, நெயில் ஆர்டிஸ்சரி, சூப்பர்கார் ஆர்டிஸ்சரி, எல்எஸ் பிஷரீஸ் (லீனா மற்றும் சுகேஷின் முதலெழுத்துகள்), நியூஸ் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களை உருவாக்கி பணமோசடி செய்துள்ளனர். மோசடி பணத்தை வணிக பரிவர்த்தனைகளாக மாற்றி அதனைசட்டப்பூர்வமான பணமாக மாற்றியுள்ளனர்.
ஜூன் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து லீனாவின் வங்கி கணக்குகளுக்கு அதிக அளவிலான பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தபரிவர்த்தனைகள் அனைத்தும் போலியானவை என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் குடும்பத்தினரிடம் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ்மற்றும் லீனா தம்பதியினர் 2021 செப்டம்பர் 5 முதல் நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலையில் திருமணம் செய்துகொண்டனர்.