பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை,

லட்சுமி நகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட பள்ளி அணிகளுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள்) கைப்பந்து போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் 7-வது தெருவில் உள்ள விளையாட்டு திடலில் இன்றும் (புதன்கிழமை), வருகிற 29-ந் தேதியும் நடக்கிறது.

இந்த போட்டியில் 30 அணிகள் பங்கேற்கின்றன. இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருமானவரி கூடுதல் கமிஷனர் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கின்றனர்.

இதே மைதானத்தில் ஜோன்ஸ் பவுண்டேசன் ஆதரவுடன் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் பெண்களுக்கான ஓபன் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் எஸ்.ஆர்.எம்., டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு போலீஸ் உள்பட 15 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இது தவிர போட்டியில் கலந்து கொள்ளும் அணியினருக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்படும்

போட்டிக்கான ஏற்பாடுகளை எம்.அழகேசன், கே.ஜெகதீஸ்வரன், மகேந்திரன், தங்கநாயகி, ஜோன்ஸ் பெர்லிங் ராஜா உள்ளிட்ட அமைப்பு குழு நிர்வாகிகள் செய்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.