ஃபேஸ்புக் ஒரு காலத்தில் வெறுமனே நட்பு கோரிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஃபேஸ்புக் மார்க்கெட் தளமாக மாறியிருக்கிறது. அதிகமானோர் தங்களது பொருள்களை பேஸ்புக் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். சாதாரணமாக வீட்டில் பொருள்கள் தயாரிப்பவர்கள்கூட தங்களது பொருள்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு விற்பனை செய்கின்றனர். அதோடு தேவைப்படும் ஆட்களை வேலைக்கு எடுக்கவும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். மேலும் விலங்குகள்கூட ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு விவசாயி ஃபேஸ்புக் மூலம் ரூ.95,000-க்கு இரண்டு காளை மாடுகளை ஆர்டர் செய்திருக்கிறார். பீட் மாவட்டத்திலுள்ள தரூர் என்ற இடத்தைச் சேர்ந்த தியானேஷ்வர் என்ற அந்த விவசாயி, அடிக்கடி ஃபேஸ்புக் பயன்படுத்தக்கூடியவர். அவர் தன்னுடைய தோட்ட வேலைக்கு தேவையான இரண்டு காளை மாடுகளை வாங்க முடிவு செய்தார்.
பக்கத்தில் விசாரித்து பார்த்தபோது காளை மாடுகள் கிடைக்கவில்லை. ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் காளை மாடுகள் விற்பனை செய்யப்படும் என்று ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த போன் நம்பருக்கு தியானேஷ்வர் போன்செய்து பேசினார். இரு தரப்பினரும் போனில் பேசி, காளை மாடுகளை வாங்க தியானேஷ்வர் முடிவு செய்தார்.
அதோடு காளை மாடுகளை டெலிவரி செய்ய பணத்தை ஆன்லைனில் செலுத்தும்படி விவசாயிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. பணத்தை செலுத்தியவுடன் அரசு வாகனத்தில் மாடுகளை அனுப்பி வைப்பதாக ஆர்டர் எடுத்த நபர் தெரிவித்தார். விவசாயியும் பணத்தை கட்டிவிட்டு காத்திருந்தார்.
மாடு வரும் என்று எதிர்பார்த்த விவசாயிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆர்டர் எடுத்த நபருக்கு போன் செய்து பார்த்தபோது, எந்தவிதமான சரியான பதிலும் கிடைக்கவில்லை. பணத்தை வாங்கிய நபர் விவசாயியை ஏமாற்றிவிட்டார். காளை மாடுகளை அந்த நபர் அனுப்பவே இல்லை. இதையடுத்து தியானேஷ்வர் போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.