இந்தியாவின் பெருமையில் ஒன்று தமிழ்… "வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்".. ஆளுநர் ஆர்.என் ரவியின் குடியரசு தின விழா உரை..!!

இந்தியா முழுவதும் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை கொடியேற்றினார். அதற்கு முன்பு காணொலி காட்சி மூலம் தமிழக மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தவர்களோடு ஆளுநர் உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் பேசியதாவது “பாரதத்தின் 74வது ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கும் எனது உளப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், அற்புதமான அறிவாற்றல் மற்றும் அசாதாரண தொலைநோக்குடனும் காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய டாக்டர். அம்பேத்கருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்போம். அந்த அரசியலமைப்பு தான் ஒரு வலுவான பன்முக ஜனநாயகமாக இந்தியா வளர உதவியாக இருந்துள்ளது.

தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடிய வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, மாவீரன் அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதை செலுத்துவோம்.

அதேபோன்று புலி தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வி.வி.எஸ். அய்யர், சிங்காரவேலர், ருக்மணி லட்சுமிபதி, தில்லையாடி வள்ளியம்மை, குயிலி, சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி, அஞ்சலை அம்மாள் மற்றும் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கிய பலருக்கும் மரியாதை செலுத்துவோம்.

இந்திய தேசிய சுதந்திர போராட்டத்தின் போது எல்லா இடர்பாடுகளுக்கும் எதிராகத் தங்களுக்குத் துணையாக நின்ற இந்தப் பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் குடும்பத்தினரை நாம் மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்வோம். இந்நாளில் இந்திய ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் இந்திய இராணுவ வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. அவர்களின் தியாகங்களுக்காக தேசம் எப்போதும் பெருமிதம் கொள்ளும். இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்” என தனது உரையில் தமிழக ஆளுநர் பேசியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.