நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய கொடி ஏற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த ஓட்டுனர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி, சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் உயர்நீதிமன்ற ஊழியர் எஸ்.கார்த்திக் என்பவர் தமிழ்நாட்டின் பராம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றி காட்டினார். அதனை தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் பாதுகாவலர்கள் சார்பில் கண்களை கட்டி கொண்டு துப்பாக்கிகளை தனி தனியாக பிரித்து பின்னர் மீண்டும் ஒன்றாக்கும் சாகசங்கள் செய்து காட்டப்பட்டது. அதேபோல் ஆண் பாதுகாவலர்கள் சார்பில் ஆயுதங்களை ஏந்தி எதிரிகளை தாக்கும் முறைகள் குறித்தும் செய்துகாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய – மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.