உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கால்இறுதியில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை துவம்சம் செய்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்த ஆட்டத்தில் 28-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் தென்கொரியா வீரர் ஜான்க் ஜோங்யுன் அடித்த பந்து நெதர்லாந்து வீரரின் ஸ்டிக்கில் பட்டு எகிறி அருகில் நின்ற நடுவர் பென் கோன்ட்ஜெனின் (ஜெர்மனி) முகத்தில் தாக்கியது. இதனால் வலியில் துடித்த அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வெளியே அழைத்து சென்றனர். அவருக்கு பதிலாக மாற்று நடுவர் களம் இறக்கப்பட்டார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானுடன் (இரவு 7 மணி) மோதுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.