செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த திருப்போரூர் ஒன்றியம் அருகே மானாமதி அருங்குப்பம் ஊராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு தனது ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகளில் ஒருவருக்கு ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த நேத்ரா என்ற மாணவி ஊராட்சி மன்ற தலைவராகவும், ஶ்ரீ பிரியதர்ஷினி என்ற மாணவி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இன்று பதவி ஏற்று கொண்டனர். இருவரையும் மேளதாளங்கள் முழக வரவேற்பு வழங்கி ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடியினை ஏற்றி தேசிய தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர். இதனை அடுத்து ஊராட்சியில் புதிதாக அமைக்க உள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். மேலும் இன்று முழுவதும் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சி முதல் கிராம சபை கூட்டங்கள் வரை அனைத்திலும் இவர்கள் தலைவராகவே செயல்பட்டதால் கிராம மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு எடுத்த இத்தகைய முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.