நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி இரண்டு நாள்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்தது. திருமண தம்பதிக்கு பாலிவுட் வட்டாரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோடிகளில் பரிசுப்பொருள்களை வழங்கியிருக்கின்றனர்.
சுனில் ஷெட்டி தன் மருமகனுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான வீட்டை வரதட்சணையாகக் கொடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்த வீடு மும்பையில் இருக்கிறது. இது தவிர சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பரான நடிகர் சல்மான் கான் மணப்பெண்ணுக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான ஆடிக்காரை பரிசாக வழங்கி இருக்கிறார்.
நடிகர் ஜாக்கி ஷெராப் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆடம்பர வாட்ச் ஒன்றை அதியா ஷெட்டிக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். நடிகர் அர்ஜூன் கபூர் ரூ.1.5 கோடி மதிப்பிலான வைர பிரேஸ்லெட் ஒன்றை அதியாவுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி மணமகன் கே.எல்.ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசாகக் கொடுத்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி மணமகனுக்கு ரூ. 80 லட்சம் மதிப்பிலான ஆடம்பர பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.
அதியாவும், ராகுலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் இருவரும் தங்களது காதலை முறைப்படி வெளியுலகத்துக்கு அறிவித்தனர். ராகுலுக்கு ஏற்கெனவே மும்பையில் கடற்கரையையொட்டி 4 படுக்கை வசதி கொண்ட பங்களா ஒன்று இருக்கிறது. ராகுல் ஆண்டுக்கு கிரிக்கெட் விளையாட்டு மூலம் ரூ.17 கோடி சம்பாதித்து வருகிறார்.