சென்னை: சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நெல் அறுவடைக்குப்பின் நஞ்சை தரிசில் பயறு வகைகளை சாகுபடி செய்வதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சம்பா நெல் அறுவடைக்குப் பின், 10 லட்சம் ஏக்கரில் பயறு வகை சாகுபடிக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்ய, 2022-ம் ஆண்டு காரீப் பருவத்திலேயே 11,731 எக்டேரில் உயர் மகசூல் ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து, போதுமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 10 லட்சம் ஏக்கருக்குத் தேவையான விதைகளை 50 சதவீத மானியத்தில் அதாவது ஏக்கருக்கு ரூ.400 வீதம் விவசாயிகளுக்கு விநியோகிக்க, முதல்கட்டமாக, ரூ.17 கோடிக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியையும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
உற்பத்தி செய்யப்படும் பயறு வகைகளை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையான உளுந்து கிலோவுக்கு ரூ.66, பாசிப்பயறு கிலோவுக்கு ரூ.77.55 விலையில் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
சம்பா, தாளடி நெல் சாகுபடி காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை 2.62 லட்சம் ஏக்கரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள உழவன் செயலியில் விவசாயிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு உங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகலாம்.
எனவே, குறைந்த நாளில், குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுவதற்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.