சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கோவை வடவள்ளி சேர்ந்த ஸ்ரீவித்யா..!!

தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. பிரசவத்துக்கு பின்னர், உடல் நல பாதிப்புகள் காரணமாக சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை ஏற்படுகிறது. அதேபோல பிரசவத்தின்போது தாய் உயிரிழப்பதால் தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கும் தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பற்றி பலர் அறிந்திருந்தாலும், தாய்மார்கள் சிலர் தானம் அளிக்க முன்வருவதில்லை. இந்நிலையில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா(27) என்பவர் கடந்த 10 மாதங்களாக, அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்காக தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., எனது கணவர் பைரவன். எங்களுக்கு அசிந்தியா (4) என்ற மகனும், 10 மாதம் ஆன ப்ரக்ருதி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் பிறந்தபோதே, தாய்ப்பால் தானம் திட்டம் குறித்து அறிந்திருந்தேன். ஆனாலும் அப்போது என்னால் தானம் செய்ய முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் தினமும் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் குறைந்த எடையிலும், உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் பிறந்திருப்பர்.

இதுபோன்ற குழந்தைகளுக்கு அவர்களது தாயாரால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. எனவே, தாய்ப்பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க தானம் அளிக்க முடிவு செய்தேன்.

திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்தி வரும் பவுண்டேசன் மூலமாக, தாய்ப்பால் தானத்தை சமூக சேவை அடிப்படையில் நான் அளித்து வருகிறேன். எனது மகள் பிறந்த 5-வது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் கொடுக்கத் தொடங்கினேன். அதிலிருந்து 7 மாத காலத்தில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளேன். தற்போது 10 மாத காலத்தில் 135 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்துள்ளேன்.

தினமும் எனது குழந்தைக்கு அளித்தது போக, மீதம் உள்ள தாய்ப்பாலை அதற்கு என பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட பாக்கெட்டில் சேகரித்து விடுவேன். பின்னர் அதனை, குளிர்சாதன எந்திரத்தில் வைத்து விடுவோம். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தன்னார்வலர்கள் வந்து சேகரித்து செல்வார்கள். அவர்கள் சேகரித்து செல்லும் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அளித்து வருகின்றனர்.

அங்கு தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ‘கப்’ மூலமாகவும், டியூப் மூலமாகவும் தேவையான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. தாய்ப்பால் தானத்துக்காக ‘இந்தியன் புக் ஆப் அன்ட் ஆசியன் புக் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் என்னை பாராட்டி, பாராட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.