புதுடெல்லி: நாடு 74வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வாழ்த்தில், “குடியரசு தின வாழ்த்துகள். இந்தத் தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின விழா வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிது. இதையொட்டி மாநிலங்களில் அந்தந்த ஆளுநர் கொடியேற்ற, டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றிவைக்கிறார்.
தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 17 ஊர்திகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகளும்அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. தமிழ்நாடு, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு – காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் – டையூ, குஜராத், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் 17 ஊர்திகள் அணிவகுப்பை அலங்கரிக்கின்றன.