சென்னை: 74 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கம் ஆனால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால் இந்த குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது. இவ்விழாவில் தேசிய கொடியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவில் முப்படை வீரர்கள், காவல் துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னையில் குடியரசு தின கொண்டாட்டங்கள்
அணிவகுப்பு நிகழ்ச்சியில், பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து துறை ரீதியான சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
இதில், முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த வருடம் பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2000 த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் மெரினா கடற்கரை பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு
கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம் காவடியாட்டம் பொய்க்கால் ஆட்டம், பிற மாநில நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகிறது.
குடியரசு தின விழா 2023
இன்றைய குடியரசு தின விழாவில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்ந்த இரண்டு வாகனங்கள், காவல் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுலாத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் இடம் பெற உள்ளது.
மேலும், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை, பொதுத் தேர்தல்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, வனத்துறை, இருந்து சமய அறநிலையத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் லிமிடெட், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை ஆகிய துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் இடம் பெற உள்ளது.