குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம், கடந்த ஐந்து தசாப்தங்களாக கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு அதிகமாக பாடியுள்ளார்.
அதேபோல் பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 91. தமிழகத்தின் தஞ்சாவூரில் பிறந்த அவர், இந்தியாவில் பரதநாட்டியத்திற்கான சிறந்த பயிற்சி மையமாக கருதப்படும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரை நிறுவியவர்.
தமிழகத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களும், இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள் இருவரும். அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். முறையான கல்வியை பெறவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பயணம் செய்து பாம்புகளை பிடித்துள்ளனர். தங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறையை பின்பற்றி பாம்பு பிடித்து வருகின்றனர்.
நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிறந்த இவர், கல்லூரியில் 30 ஆண்டுகள் நூலகராக உழைத்து பணியாற்றிக் கிடைத்த தொகை, ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டுப் பணிக்கு கொடுத்தார். பாலம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சமூக சேவை ஆற்றி வருகிறார்.
மருத்துவ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.