’தமிழ்நாடு வாழ்க’ குடியரசு தின விழா அணி வகுப்பில் முதலில் வந்த வாகனம்..!

74 வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்றது. உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வழக்கமாக குடியரசு தின விழா சென்னை மெரீனா கடற்கரையில் இருக்கும் காந்தி சிலை அருகே நடைபெறும். இப்போது அங்கு மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின விழா நடைபெறும் நிகழ்ச்சிக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதன் பிறகு, முப்படையினர், கடலோர காவல் படையினர், காவல், சிறை, வனம், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பும், கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படையின் அலங்காரஊர்திகளும் வலம் வந்தன. 

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ’தமிழ்நாடு வாழ்க’ என்ற வாசகத்தை ஏந்திய வாகனம் முதலாவதாக அணிவகுப்பில் வந்தது. அதனைத் தொடர்ந்து விளையாட்டு துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துறைகளின் வாகனங்கள் அணி வகுத்தன. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இருப்பினும், தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தை ஏந்தி வந்த வாகனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அண்மையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற வாசகத்துடன் வந்த வாகனம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.