திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி, சாமராயபட்டி, கொழுமம், குமரலிங்கம் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராமங்களில் அதிக அளவில் கரும்பு மற்றும் மக்காச்சோளம் பயிரிடப்படுவதால், அவற்றை உண்ண காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களைத் தேடி வருவது வழக்கம்.
இவ்வாறு வரும் காட்டுப் பன்றிகளை, சிலர் வேட்டையாடி வருவதாக போலீஸார் மற்றும் வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இந்த நிலையில், சாமராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை குமரலிங்கம் போலீஸார் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் சாமராயப்பட்டியைச் சேர்ந்த துக்கைவேல் (39), சிவசக்தி (20), மாசாணி முத்து (23) என்பதும், அவர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடச் செல்வதும் தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து ஒரு கள்ளத் துப்பாக்கி, 3 தோட்டாக்கள், இரண்டு டார்ச் லைட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் துப்பாக்கி, தோட்டக்களை கோவையைச் சேர்ந்த சதீஷ் என்பவரிடம் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக ரூ.14,000-க்கு துக்கைவேல் விலைக்கு வாங்கியது தெரியவந்தது. வேட்டையாடப்படும் காட்டுப் பன்றிகளின் இறைச்சியை கிலோ ரூ.500 முதல் விற்பனை துக்கைவேல் விற்பனை செய்துவந்திருக்கிறார். இதையடுத்து, துக்கைவேல், சதீஷ் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.