ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்பில் சேரவிருந்த 2 சிறார்கள் உள்ளிட்ட 5 இளைஞர்களை ராணுவத்துடன் சேர்ந்து பாரமுல்லா போலீஸார் மீட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர பாகிஸ்தானில் இருந்து தூண்டப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலைப் பெற்ற பாதுகாப்பு படையினர் முதலில் இந்த இளைஞர்களை கண்டுபிடித்தனர். பிறகு பெற்றோர்கள் உதவியுடன் அவர்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் இவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருப்பதும் தீவிரவாத அமைப்புகளில் சேர இவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுவதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த இளைஞர்களுக்கு உரிய ஆலோசனை தரப்பட்டு, பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.