சென்னை: தமிழ்நாட்டிலிருந்து பத்மபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள பாடகி வாணி ஜெயராம் மற்றும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கும் எனது மனமகிழ் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் (சமூகப்பணி), பாலம் கல்யாணசுந்தரம் (சமூகப்பணி), கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்) ஆகிய ஆறு பேருக்கும் எனது மனமகிழ் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் உயரிய விருது பெறவிருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளை, பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் , நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரம், மருத்துவர் கோபால்சாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.