மருத்துவத் துறையில் சாதனை புரிந்ததற்காக மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை ஹிமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சமர்பிப்பதாக மருத்துவர் நளினி பார்த்தசாரதி ‘புதிய தலைமுறை’க்கு அளித்துள்ளே பேட்டியில் கூறியுள்ளார்.
மருத்துவத்துறையில் சேவையாற்றியதற்கு புதுச்சேரியை சேர்ந்த நளினி பார்த்தசாரதிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பயின்று அங்கேயே குழந்தைகள் நல மருத்துவராக தனது பணியை தொடங்கியவர். குழந்தைகள் ஹிமோபிலியா நோய் பாதித்து அவதிப்பட்டதை கண்டு, `இந்த நோயால் பாதிக்கப்படுவோர் அனைவருக்கும் மருத்துவம் செய்ய வேண்டும்’ என்ற நோக்கில் சேவை செய்ய தொடங்கியவராவார் நளினி பார்த்தசாரதி. ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்துள்ளார்.
இதன்பின்பு டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஹிமோபிலியா சொசைட்டியை புதுச்சேரி அரசின் உதவியுடன் புதுச்சேரியில் துவக்கி வைத்தார். அதன்மூலம் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த 300 நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை கொடுத்து சிகிச்சையளித்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்நாளையும் கண்காணித்து உதவிகள் பல புரிந்து வருகின்றார்.
மத்திய அரசு தனக்கு அளித்த பத்மஸ்ரீ விருதை ஹிமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காணிக்கையாக்குகின்றேன் என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், “இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் விலை அதிகமாக இருக்கிறது. ஆகவே இதை குறைந்த விலையிலும், தாராளமாக கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுசெய்ய பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “ஹீமோபிலியா என்பது ரத்தத்துடன் தொடர்புடைய ஒரு மரபணு பிரச்சனையாகும். இந்த நோய் உள்ள நபருக்கு, லேசான காயம் ஏற்பட்டாலும் ரத்தம் நிற்காமல் இருக்கும். பல சமயங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாகிறது. இது ரத்தப்போக்கு நோய்” என்றும் அழைக்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM