புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அ.ம.மு.க சார்பில் நேற்று இரவு நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தி மொழியைத் திணிக்கும் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வளராது. தமிழகத்தில் இந்தி மொழியைத் திணிக்க முயன்ற காங்கிரஸால், அதன் பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த நிலையை பா.ஜ.க நன்கு உணர்ந்திருக்கிறது. அது போன்ற ஒரு விபரீத முடிவை பா.ஜ.க எடுக்காது. பா.ஜ.க தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்றால், அன்று காங்கிரஸுக்கு ஏற்பட்ட அதே நிலை பா.ஜ.க-வுக்கும் ஏற்படும்.
தமிழகத்தில் ஒரு வார்டு கவுன்சிலரைக்கூட வெற்றி பெற முடியாது. தமிழக வரைபடத்திலிருந்து பா.ஜ.க என்ற கட்சி காணாமல் போகும். எடப்பாடி பழனிசாமியின் தவறான ஆட்சியினால் தி.மு.க-வுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு முடக்கிவிட்டது. அதேபோன்று, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. மத்திய வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் தேர்வாகும் அளவுக்கு தமிழக அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த போதெல்லாம், தனக்குப் பிடித்த அமைச்சரவை இலாகாக்களைக் கேட்டுப் பெற்றதைத் தவிர தமிழர்களுக்காக எதையும் தி.மு.க செய்ததில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என தி.மு.க முயற்சி செய்து வருகிறது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டும்விதமாக அந்தத் தொகுதியில் அ.ம.மு.க போட்டியிடுகிறது. வரக்கூடிய மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடந்தாலும், அதிலும் அ.ம.மு.க போட்டியிடும். தமிழகத்தில் அ.ம.மு.க முத்திரை பதிக்கும்” என்றார்.
முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆட்சிக்கு வந்த தி.மு.க, கடந்த 20 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதே நேரத்தில் அதற்கு எதிர்மறையாகச் செயல்படுகின்றனர். கல்வீசிய அமைச்சர் நாசரின் செயல்பாடுதான் திராவிட மாடல் ஆட்சியின் வெளிப்பாடு. பா.ஜ.க வளர்ந்து வருகிறது என்று சொல்ல முடியாது. ஒரு கட்சி வளர்வது என்பது மக்களின் கையில்தான் இருக்கிறது. அ.தி.மு.க இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு, டெல்லி பா.ஜ.க-தான் காரணம். டெல்லி நினைத்தால்தான் அவர்களை இணைக்க முடியும். மீண்டும் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் முயற்சியாக பா.ஜ.க தலைமை என்னை அழைத்தால் அதன்பின்பு முடிவெடுப்பேன்” என்றார்.