சென்னை: 74-வது குடியரசு தினத்தையொட்டி, திருப்பூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு, சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நாடு முழுவதும் இன்று நாட்டின் 74-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி, மாநிலத்தில் உள்ள சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான முதலமைச்சர் விருதுக்கு திருப்பூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இதில் சிறந் காவல் நிலையத்துக்கான முதல் பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையமும், இரண்டாம் பரிசு திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையமும், மூன்றாவது பரிசு திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்துக்கும் வழங்கப்படுகிறது.
குடியரசு தின விழாவையொட்டி காலை 8 மணியளவில் மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஆளுநர் தனது உரையில், “இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவுகிறது.வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம்” என்று குறிப்பிட்டார்.