இந்திய அரசியலமைப்பு சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள்தான் குடியரசு தினமாகும். அதனடிப்படையில்தான் ஆண்டுதோறும் சனவரி 26ஆம் நாளன்று நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. விடுதலை இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேர்தல் மூலம் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினரை – ஆட்சியாளர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டதுதான் குடியாட்சி ஆகும்.
குடியாட்சி என்பதற்கு மக்களாட்சி என்பதே சரியான பொருளாகும். மேலும் நாட்டில் வசிக்கும் குடிமக்களால் தேந்தெடுக்கப்படுகிற அரசுதான் குடியரசாகும்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன்தான் குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தார். அவற்றையே பல்வேறு நாடுகளும் பின்பற்றின. விடுதலை இந்தியாவிலும் ஆட்சியாளர்கள் அவற்றைதான் இன்றுவரை பின்பற்றுகிறார்கள்.
1947ஆம் ஆண்டு ஆகத்து 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது. ஆனால், அதற்கு 16ஆண்டுளுக்கு முன்பே, இந்தியா, ‘விடுதலை நாளை’ மிகச்சிறப்பாக கொண்டாடியிருக்கிறது என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.
அதன் வரலாற்று சுருக்கம் :
இந்திய அரசியலமைப்பு சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்குமுன், 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு லாகூரில் கூடியது. அதில், ‘பூரண சுயராஜ்ஜியமே நம் லட்சியம்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. வறுமை ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அந்த சூழலிலும் விடுதலையுணர்வு தீ பிழம்பாய் கனன்று கொண்டிருந்தது. அதன் விளைவாக விடுதலை வேட்கை மக்கள் மத்தியில் ஆர்ப்பரித்தது. இந்நிலையில், ஆங்காங்கே ஆங்கிலேயே அரசு கையாண்ட அடக்குமுறையால் அமைதியாக நடைபெற்றுவந்த போராட்டங்களில் வன்முறைகள் வெடித்தன.
இந்த சூழ்நிலையில், மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினால், அது மேலும் வன்முறைக்கு வழிவகுத்துவிடும் என்பதை மகாத்மா காந்தி தீர்க்கமாக உணர்ந்தார்.
அவற்றைத் தடுத்து நிறுத்தும் வகையில், விடுதலை எழுச்சியை அகிம்சை பாதையில் அழைத்துச்செல்ல முற்பட்டார், தேசபிதா. அதன் பொருட்டு, மக்கள் போராட்ட உணர்வுக்கு மதிப்பளிக்கும் எண்ணத்திலும் வன்முறையை தவிர்க்கும் வகையிலும் புதிய யோசனை ஒன்றை காந்திஜி முன்வைத்தார். அதன்படி, 1930ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாளன்று நாடு முழுவதும் விடுதலை நாள் கொண்டாடப்படவேண்டும் என மகாத்மா காந்தி மக்களிடம் வேண்டுகோள் வைத்தார்.
அவ்வேண்டுகோளுக்கிணங்க, அன்றைய நாள் நகர்ப புறங்களிலும் கிராமப் புறங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் மாபெரும் கூட்டத்தை நடத்தினர். அக்கூட்டத்தில் மகாத்மா ஆற்றிய விடுதலை பேருரையை மக்கள் மத்தியில் காங்கிரசார் எழுச்சியுரையாக எடுத்துரைத்தனர்.
அதில், அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், கலாச்சாரம் ஆகிய நான்கு விதத்திலும், நமது தாய் நாட்டிற்கு கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
நாடு விடுதலை அடைவதற்கு 16ஆண்டுகளுக்கு முன்பே, 1930ஆம் ஆண்டு மகாத்மா ஏற்படுத்திய சுதந்திர நாள்தான் சனவரி 26 ஆகும்.
1949ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் முதல் பிரதமரான நேரு தலைமையிலான அமைச்சரவையானது 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது. இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறாகும்.
காந்திஜியின் விருப்பத்துக்கிணங்க, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். அன்றுமுதல் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குடியரசு நாளன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
இந்திய விடுதலைக்குபின் நாட்டின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவஹர்லால் நேருவின் முன்னிலையில் முதல் குடியரசு நாள் அணிவகுப்பு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடந்தேறியது. அன்று தொடங்கிய முதல் குடியரசு நாள் கொண்டாட்டமானது இன்று கொண்டாடப்படுகிற 74ஆவது குடியரசு நாளிலும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியா உலகளவில் மிகப்பெரிய சனநாயக நாடாகும். நாட்டு விடுதலைக்காக லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான விடுதலை போராட்டக்காரர்களின் தன்னலமற்ற சேவையும் , உயிர் தியாகமும் இங்கே ஒளிந்திருக்கிறது என்பதே முற்றிலும் உண்மையாகும்.
ஆகமொத்தத்தில், மக்களாட்சி மலர்வதற்கு அடிகோலிய நாள்தான் குடியரசு தினமாகும்.