Republic Day 2023: இந்திய தேசிய கொடியை வடிவமைத்த சிப்பாய்..! யார் தெரியுமா அவர்?

Republic Day 2023: நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவரும், தமிழ்நாட்டில் ஆளுநரும் கொடியேற்றி குடியரசு தின விழாவை சிறப்பிக்க இருக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தருணத்தில் தேசியக்கொடி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம். இந்தியாவின் தேசியக்கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா. பிரிட்டீஷ் ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்தவர். 

பிங்காலி வெங்கையா பிறந்தது ஆந்திர மாநிலம், மலிச்சிப்பட்டனத்தில். 1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்த அவர், புவியியலாளராக பணியாற்றினார். ஜப்பானிய மொழியை சரமாள பேசக்கூடியவர். ஆந்திர தேசியக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றிய அவர், பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக போரில் ஈடுபடுவதற்கு தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இந்திய சுதந்திர போராட்டம் இன்னும் வீரியம் பெற கொடி ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து பல்வேறு கொடி மாதிரிகளை உருவாக்கினார். 

இரண்டு கோடுகள் கொண்ட சிவப்பு மற்றும் பச்சை வர்ணத்தில் கொடி மாதிரி ஒன்றை உருவாக்கிய அவர், நடுவில் காதர் ராட்டை சக்கரத்தை வைத்தார். இதனை மகாத்மா காந்தியிடம் 1921 ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கொடுக்க, அவர் சில ஆலோசனைகளை கொடுத்து அந்த மாதிரிக்கு ஒப்புதல் அளித்தார். காந்தியின் ஆலோசனையின் பேரில் வெள்ளை சேர்க்கப்பட்டு மூவர்ணமாக தேசிய கொடி மாறியது. இந்தியாவுக்கு தேசிய கொடி வடிவமைத்து கொடுத்து பெரும் புகழுக்கு சொந்தக்காரராக மாறிய பிங்காலி வெங்கையா 1963 ஆம் ஆண்டு காலமானார். அவரது நினைவாக 2009 ஆம் ஆண்டு தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு, விஜயவாடாவில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்திற்கு அவரது பெயரையும் சூட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.