“அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று கையொப்பமிட்டு அனுப்பும் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது” என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் முறையிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்து வந்த நிலையில், அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுகவின் பொதுக்குழு கூடி அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பாக இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டையும் இரண்டு தரப்பினரும் உரிமை கொண்டாடும் நிலையில், அதிமுகவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே அதிமுக பொதுக்குழு விவகாரத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் அதிகமாசுந்தரம் இன்றைய தினம் சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் “பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எங்கள் தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி இபிஎஸ் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சில அறிவுறுத்தல்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தல் எப்போது நடைபெறுகிறது என்பது பற்றியும் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்ன என்பது பற்றியும் விவரங்களை கேட்டறிந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி தினம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சொன்னவுடன், “அப்படி என்றால் வரும் திங்கட்கிழமை முறையிடுவதற்கான விண்ணப்பங்களை சரியாக தாக்கல் செய்து பிறகு வந்து முறையிடுங்கள்” என நீதிபதிகள் கூறினர்.
அதனை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்றுக் கொண்ட போது, “உங்களது முறையீடு விவகாரத்தை எதிர் தரப்பான ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் பகிர்ந்து கொண்டீர்களா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு `அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டோம்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளித்தது. `அப்படி என்றால் திங்கட்கிழமை வந்து முறையிடுங்கள். அதே நேரத்தில் தீர்ப்பு வழங்குவது குறித்து நாங்களும் பரிசீலிக்கிறோம்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM