சேலம்: ‘தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசை, வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அவதூறு பேசுவது தொடர்கதையாக கொண்டுள்ளது’ என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 26,649 பயனாளிகளுக்கு ரூ.221.42 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ”மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரூ.140 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மீண்டும் 1724 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.23.75 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். நகர பேருந்துகளில் 16.58 கோடி பெண் பயணிகள் இலவசமாக பயமணம் செய்துள்ளனர்.
அதேபோல, மாணவ, மாணவிகளுக்கான காலைச் சிற்றுண்டி திட்டம், பெண்களுக்கான சுயதொழில் செய்வதற்கான சிறப்புக் கடன் உதவி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கரோனா ஊரடங்கில் ஆட்சி பொறுப்பேற்ற நிலையிலும், சிறப்பான பணியால் மக்களையும், மாநிலத்தையும் முதல்வர் ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார். மக்களை காக்க வேண்டி மக்களை தேடி மருத்துவம் திட்டம் கொண்டு வந்து, அத்திட்டத்தின் மூலம் ஒரு கோடி மருந்து பெட்டகங்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ரூ.25 கோடியில் வெள்ளி தொழிலுக்கான பன்மடி மையம், 119 ஏக்கரில் ஜவுளி பூங்கா, கருப்பூரில் டைடல் பார்க், ரூ.158 கோடியில் ரயில்வே மேம்பாலம், மூக்னேரி உள்பட மூன்று ஏரிகளை சீரமைக்கும் திட்டம், ரூ.530 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மையம், ரூ.12.25 கோடியில் ஆவினில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசை, வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அவதூறு பேசுவது தொடர்கதையாக கொண்டுள்ளது.
இதையெல்லாம் புறம்தள்ளி மக்கள் நலனுக்காக மக்களின் திட்டங்களை எடுத்துச் செல்ல முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். போலிகளையும், பொய்யர்களையும், துரோகிகளை நம்ப வேண்டாம். தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதால் எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, சிறப்பு செயலாக்க திட்ட அரசு சிறப்பு செயலாளர நாகராஜன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
”மணமக்கள் ஓபிஎஸ் -இபிஎஸ் போல இருக்கக் கூடாது”
இதனிடையே, சேலம், இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரியில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ”சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் தான் திமுக வெற்றி பெற்றது. தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு, மிகப் பெரிய வெற்றியை தேடி தருவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் மிகப் பெரிய வெற்றியை தேடி தருவீர்கள் என நம்புகிறேன்.
நான் தொடர்ந்து திருமண விழாக்களில் மணமக்கள் எப்படி இருக்கக் கூடாது என்று சொல்வேன்.ஓபிஎஸ் – இபிஎஸ் மாதிரி மணமக்கள் இருந்து விடக்கூடாது. இருவரும் சட்டபேரவையில் அருகருகே அமர்ந்து இருப்பார்கள். ஆனால், ஒருவருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பேசிக்கொள்ள மாட்டார்கள். பிரதமர் மோடிக்கு யார் மிகபெரிய அடிமை என்கிற போட்டியோ நடக்கும். ஆட்சியில் இருந்தவரைக்கும் அவர்கள் இருவருக்குமிடையே எந்த பிரச்சினையும் இல்லை. இப்போது ஆட்சி இல்லை என்றவுடனே நீயா, நானா என்ற பிரச்சினை நிலவுகிறது.
சட்டமன்றத்தில் நான் பேசியபோது, ‘ஓபிஎஸ், இபிஎஸ் அவர்களே இருவரும் என்னுடைய காரை தவறுதலாக எடுக்க போயிவிட்டீர்கள், காரை எடுத்துக் கொண்டு தாராளமாக செல்லுங்கள், ஆனால், தயவு செய்து கமலாலயம் மட்டும் போய்விடாதீர்கள்’ என்றேன். அப்போது, முன்னாள் முதல்வர் பழனிசாமி மட்டும் பேசவே இல்லை. அதற்கான அர்த்தம் இப்போது தான் தெரிகிறது. அப்போது, ஓபிஎஸ் மட்டும் எழுந்து ”என்னுடைய கார் எந்த காலத்திலும் கமலாலயம் செல்லாது” என்று கூறினார். இப்போது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்துள்ளனர்” என்று அவர் பேசினார்.